11 இடங்களில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
ஏழை மக்களுக்கு 11 இடங்களில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வருமானம் இன்றி அவதிப்படும் ஏழை மக்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், நடுத்தெரு, அனுமந்தநகர், சுப்புராமன் பட்டறை, கொல்லம்புதூர், பாலகிருஷ்ணாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் வீடு அருகில், பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தராஜபுரம், மாசிலாமணிபுரம், என்.ஜி.ஓ. காலனி ஓடையூர், உழவர் சந்தை அருகே ஆகிய 11 இடங்களில் பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு, மைதா, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.