நாகர்கோவிலில் தேன் சேகரிப்போர் சங்கத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 71 பேர் கைது
நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேன் சேகரிப்போர் சங்கத்தினர் உள்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தேன் சேகரிப்போர் சங்கத்தினர் உள்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன் விவசாயிகள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த தேன் விவசாயிகள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மரக் கூடுகளை பராமரிக்க முடியாமலும், உற்பத்தி செய்த தேனை ஊருக்கு கொண்டுவர முடியாமலும் அவர்கள் தவிக்கிறார்கள்.
அதோடு ஊரடங்குக்கு முன்பே ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் உரிய நேரத்துக்குள் கூடுகளில் இருந்து தேனை எடுக்காமல் இருந்தால் தேன், தேன் கூடு மற்றும் தேனீக்களையும் இழக்கும் நிலை ஏற்படும் என தேன் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
எனவே கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள தேனீ கூடுகளை பராமரிப்பதற்கு சென்று தங்கி தொழில் செய்வதற்கான அனுமதி பெற்றுத்தரக்கோரி குமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு குமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, சிதம்பர கிருஷ்ணன், சிங்கராயன், தங்க மோகன், ஆண்டனி மற்றும் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது குமரி மாவட்ட விவசாயிகள் சேகரித்த தேன் அனைத்தையும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்ய தேவையான நிதி மற்றும் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கைது
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கூட்டமாக கூட அனுமதி இல்லை. எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 71 பேரை போலீசார் கைது செய்தனர்.