நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் ஆதார் அட்டையை காட்டுவதில் புதிய நடைமுறை

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் கண்டக்டரிடம் பயணிகள் ஆதார் அட்டையை காட்டுவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

Update: 2020-06-04 23:56 GMT
நெல்லை, 

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் கண்டக்டரிடம் பயணிகள் ஆதார் அட்டையை காட்டுவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. பயணிகள் பஸ் ஏறுவதற்கு காத்திருப்பதை தவிர்ப்பதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட்டது.

பஸ் போக்குவரத்து

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 1-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் 50 சதவீதம் என்ற அடிப்படையில் இயக்கப்படுகிறது.

முதல் நாளில் பஸ்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து பஸ்கள் சீராக இயக்கப்பட்டு வருவதால் அதில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்களில் கூட்ட நெரிசலுடன் பயணிகள் சென்று வருகிறார்கள். சமூக இடைவெளி என்ற நடைமுறை காற்றில் பறக்க விடப்பட்டது.

ஆதார் அட்டை

இந்த நிலையில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசல் கடுமையாக இருந்தது. மேலும் நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் மண்டலத்தை கடந்து வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் பயணிகளின் விவரங்களை சரிபார்த்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதற்காக பயணிகள் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற பயணிகளிடம் ஆதார் கார்டை வாங்கி, அதில் உள்ள எண் உள்ளிட்டவற்றை சரிபார்த்து, அதை பதிவு செய்த பிறகே பஸ்சில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஒரு பயணி பஸ்சில் ஏறுவதற்கு அரை மணி நேரம் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

புதிய நடைமுறை

இதையடுத்து நேற்று புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதாவது பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக ஆதார் அட்டையை சரிபார்ப்பதற்கு பதிலாக, பஸ் வந்த உடன் பயணிகள் ஏற்றப்பட்டனர். பின்னர் பஸ்சில் கண்டக்டர் ஒவ்வொரு பயணியிடமும் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்தார். அதில் தங்களது விவரங்களை பதிவு செய்தனர். தங்களது ஒரிஜினல் ஆதார் அட்டையை காண்பித்து, அதன் எண்ணை படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்தனர். சிலர் ஆதார் அட்டை நகலை படிவத்துடன் இணைத்து கொடுத்தனர். இதனால் பயணிகள் காலதாமதம் இன்றி உடனுக்குடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதுதவிர நேற்று கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டதால், பயணிகள் சமூக இடைவெளி விட்டு பஸ்களில் பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்