மார்த்தாண்டம் மேம்பால தடுப்பு சுவரில் திடீர் விரிசல்களால் பரபரப்பு பொதுமக்கள் அச்சம்

மார்த்தாண்டம் மேம்பால தடுப்பு சுவரில் திடீரென ஏற்பட்ட விரிசல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2020-06-04 23:51 GMT
குழித்துறை, 

மார்த்தாண்டம் மேம்பால தடுப்பு சுவரில் திடீரென ஏற்பட்ட விரிசல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மார்த்தாண்டம் மேம்பாலம்

குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகராக மார்த்தாண்டம் விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வரும். இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மார்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

மார்த்தாண்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டுமணி வரை 2½ கி.மீ. தூரத்துக்கு புதிதாக இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தில் தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் அதிக அளவில் உள்ளது.

தடுப்பு சுவரில் விரிசல்கள்

மேலும் பாலத்தின் இரு பக்கமும் தடுப்பு சுவர்கள் உள்ளன. மார்த்தாண்டம் பஸ் நிலைய சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி மைதானம் வழியாக நாகர்கோவிலுக்கு வருவதற்காக பாலத்தில் ஏறும் பகுதியில், பாலத்தின் வலது பக்கம் உள்ள தடுப்பு சுவரில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போல் சிறிது தூரத்தில் இடது பக்க தடுப்பு சுவரிலும் விரிசல் காணப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே மேம்பாலம் அமைத்து ஒரு ஆண்டிலேயே ஆங்காங்கே சில இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. தற்போது மேம்பால தடுப்பு சுவரிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பது பொது மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த யாரோ ஒருவர் பொறுக்க முடியாமல் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை, பிறர் பார்க்க வேண்டாம் என்ற எண்ணத்திலோ என்னவோ அதி புத்திசாலிதனத்தை பயன்படுத்தி 2 பக்க சுவர் விரிசல்களிலும் தெர்மாகோலை சொருகி வைத்துள்ளார்.

அகலப்படுத்த வேண்டும்

பம்மம் பகுதியில் பாலத்துக்கு கீழே உள்ள அணுகு சாலை குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. மேலும் மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கழிவறை வசதி இல்லை. இதனால் இந்த பகுதிக்கு வரும் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

மேலும் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் காத்திருந்து ஏறி செல்ல வசதியாக நிழற்குடை உள்ளது. ஆனால் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் பயணிகளுக்கு இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மழை பெய்தால், மழையில் நனைந்தும், வெயில் அடித்தால் அதில் நிற்கும் அவல நிலையும் உள்ளது. எனவே அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டிமுடித்து பயன்பாட்டுக்கு வந்தபிறகு மேம்பால தடுப்பு சுவர் விரிசல் போன்ற குறைபாடுகளை உடனே சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று மக்கள் எதிர் பார்ப்புடன் காத்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்