ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா சென்னையில் இருந்து வந்தவருக்கும் தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னையில் இருந்து வந்தவருக்கும் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91-ஆக இருந்தது. இந்த நிலையில் பரமக்குடி மேலப்பெருங்கரை ஏ.லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண், ராமநாதபுரம் சக்கரக்கோட்டை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 43 வயது பெண், ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த 22 வயது பெண், தொண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த 63 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஆஸ்பத்திரிகளில் சேர்க்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடவடிக்கை
இவர்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் டீக்கடை வைத்து நடத்தி வரும் 52 வயது நபர் அங்கிருந்து பரமக்குடி வந்ததை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
சென்னையில் பரிசோதனை செய்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அவர் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.