மண்டல எல்லை வரை மட்டுமே செல்வதால் பஸ்களில் எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் கூட்டம் இல்லை

மண்டல எல்லை வரை மட்டுமே செல்வதால் பஸ்களில் எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் கூட்டம் இல்லை.

Update: 2020-06-04 03:26 GMT
திருச்சி, 

மண்டல எல்லை வரை மட்டுமே செல்வதால் பஸ்களில் எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் கூட்டம் இல்லை.

எதிர்பார்த்த அளவுகூட்டம் இல்லை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வினை தொடர்ந்து, திருச்சியில் கடந்த 1-ந்தேதி முதல் பஸ்கள் ஓட தொடங்கின. நான்காம் மண்டலத்தில் உள்ள திருச்சியில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் 2 நாட்கள் அனைத்து பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே மக்கள் பயணித்தனர்.

3-வது நாளான நேற்றும் அதே நிலை தான். டவுன் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பயணிகள் ஆர்வமுடன் ஏறினார்கள். மற்ற நேரங்களில் ஒரு பஸ்சிற்கு 10-க்கும் குறைவான பயணிகளையே காண முடிந்தது. எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் கூட்டம் இல்லை.

மாவட்ட எல்லை வரை...

இதுபற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், திருச்சியில் தங்கி இருந்த பல ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். அவர்கள் தான் அதிகளவில் வேலை நிமித்தமாக பஸ்களை பயன்படுத்தி வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாததும், மண்டல எல்லை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுவதும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு இன்னொரு காரணமாகும் என்றனர்.

திருச்சி மண்டலத்திற்குள் இயக்கப்படும் அரசு பஸ்கள் சேலம் மார்க்கத்தில் தொட்டியம் வரையும், கரூர் மார்க்கத்தில் பெட்டவாத்தலை வரையும், திண்டுக்கல் மார்க்கத்தில் வையம்பட்டி வரையும், மதுரை மார்க்கத்தில் துவரங்குறிச்சி வரையும், விழுப்புரம் மார்க்கத்தில் தொழுதூர் வரையும் செல்கின்றன. எல்லைப்பகுதியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதும் அடுத்த மண்டலத்தின் மூலம் இயக்கப்படும் பஸ்களில் அவர்கள் ஏற்றி செல்லப்படுகிறார்கள் என அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டல பொது மேலாளர் ராஜ்மோகன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்