ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கால்நடை வளர்ப்போர்-வியாபாரிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சந்தைகள் மூடப்பட்டன. இதனால் கால்நடைகளை வளர்ப்போர், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

Update: 2020-06-04 02:47 GMT
நெல்லை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சந்தைகள் மூடப்பட்டன. இதனால் கால்நடைகளை வளர்ப்போர், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற சந்தைகள்

பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பண்டமாற்று முறையில் வணிகம் செய்து வந்தனர். கொற்கை, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களின் வழியாக கடல் கடந்து சென்று நாடுகளை வென்றதுடன், அயல் நாடுகளுடன் வணிகத்திலும் சிறந்து விளங்கினர்.

பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப, பல்வேறு இடங்களிலும் வாரச்சந்தைகள் நடத்தப்படுவது வழக்கம். அங்கு வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மொத்தமாக வாங்கி செல்வார்கள். மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களையும், வளர்த்து வந்த கால்நடைகளையும் சந்தையில் விற்பனை செய்து வருவாய் ஈட்டினர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பல்வேறு இடங்களிலும் சந்தைகள் நடைபெற்று வந்தது. மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை விற்பனை செய்யும் சந்தைகளில் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதால், அங்கு வியாபாரம் களைகட்டும்.

ஆட்டுச்சந்தை

அதன்படி திங்கட்கிழமை அதிகாலையில் கடையத்திலும், திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் வரையிலும் மேலப்பாளையத்திலும், வியாழக்கிழமை பாவூர்சத்திரத்திலும், வெள்ளிக்கிழமை முக்கூடலிலும், சனிக்கிழமை ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியிலும் ஆடு, மாடு, கோழி விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை பிரசித்தி பெற்றது.

கால்நடைகள் விற்பனை

கடையம் சந்தையில் மாடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும். மேலப்பாளையம் சந்தையானது ஆடு, மாடுகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு விற்பனை செய்யப்படும் ஆடு, மாடுகளை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் வருவார்கள். இதன்மூலம் கால்நடைகளை வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் அதிகளவில் பயன் அடைந்தனர்.

மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் கால்நடைகளை லோடு ஆட்டோ, மினிலாரி போன்ற வாகனங்களில் ஏற்றி செல்வதால், டிரைவர்களுக்கும் போதிய வருமானம் கிடைத்தது.

குளிர்சாதன வசதி கொண்ட லாரிகள்

பாவூர்சத்திரம், முக்கூடல் சந்தைகள் ஆடுகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு 30 கிலோ எடை கொண்ட ஆடுகள் வரையிலும் விற்பனை செய்யப்படுவது உண்டு. 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. கிடா ஆட்டை ரூ.7,500 வரையிலும் விலைக்கு வாங்கி செல்வார்கள்.

இதேபோன்று ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு பெயர் பெற்ற ரெட்டியார்பட்டி சந்தையிலும் ஆடுகள், கோழிகளை வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகள் வருவது வழக்கம். இங்கு பெரும்பாலும் மதுரை, தேனி, மணப்பாறை, வையம்பட்டி பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் அதிக வியாபாரிகள் வந்து ஆடு, கோழிகளை வாங்கி செல்வார்கள். நீண்ட தூரத்தில் இருந்து வருகிற வியாபாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட லாரிகளில் வந்து ஆடு, கோழிகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

விற்பனை மந்தம்

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த 70 நாட்களுக்கு மேலாக அனைத்து சந்தைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை மந்தமாக உள்ளது. வியாபாரிகள், கால்நடைகளை வளர்ப்பவர்களிடம் நேரடியாக சென்று கால்நடைகளை வாங்க சென்றால், சில நேரங்களில் அதிக விலை கூறுகின்றனர். அல்லது அறியாமையால் குறைந்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது.

மேலும் சந்தைகள் செயல்படாததால், உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சந்தையை நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டல்கள், டீக்கடைகளிலும் வருமான இழப்பு ஏற்படுகிறது. ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டதால், கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

மீண்டும் திறக்கப்படுமா?

கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சந்தைகளும் மூடிக் கிடக்கிறது. இதனால் கடந்த 70 நாட்களுக்கு மேலாக வியாபாரிகளும் போதிய வருமானமின்றி வறுமையில் வாடுகிறோம். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கும் போதிய வருமானம் கிடைக்க பெறாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தங்களது கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்கும் நிலை உள்ளது. கால்நடைகள் தட்டுப்பாடு காரணமாக இறைச்சி விலையும் உயர்ந்துள்ளது. எனவே, சந்தைகள் செயல்பட்டால்தான், போதிய அளவு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதன்மூலம் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைப்பதுடன் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மேலும், சந்தை தொழிலை நம்பியுள்ள பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். எனவே, ஊரடங்கால் மூடப்பட்ட சந்தைகளை மீண்டும் திறந்து, அங்கு சமூக இடைவெளியை கடைபிடித்து கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கால்நடைகளை வளர்ப்போரும், வியாபாரிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்