கொடைக்கானலில் குட்டியுடன் கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல் அண்ணா சாலையில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டியுடன் கூட்டமாக உலா வந்தன.

Update: 2020-06-04 01:03 GMT
கொடைக்கானல், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் காட்டெருமை, மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் சர்வசாதாரணமாக நகருக்குள் நுழைந்து உலா வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை கொடைக்கானல் அண்ணா சாலையில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டியுடன் கூட்டமாக உலா வந்தன. இதனால் அப்பகுதியில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்ற பொதுமக்கள், காட்டெருமைகளை கண்டு அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், நகருக்குள் நுழைந்த காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இருப்பினும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நகரில் அங்குமிங்கும் ஓடிய காட்டெருமைகள், பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வனப்பகுதிக்குள் புகுந்தது.

மேலும் செய்திகள்