வரும் தேர்தலில் காங்கிரஸ் தூள் தூளாகும்; தனவேலு எம்.எல்.ஏ. பரபரப்பு பேட்டி

வரும் தேர்தலில் காங்கிரஸ் தூள் தூளாகும். ஒட்டுவதற்கு பசைகூட கிடைக்காது என்று தனவேலு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2020-06-04 00:27 GMT
புதுச்சேரி,

பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தனவேலு மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா அனந்தராமன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டு தனவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் தன் மீது நடவடிக்கை எடுக்க தடை செய்ய கோரி கோர்ட்டில் முறையீடு செய்தார். தனவேலு எம்.எல்.ஏ. தனது விளக்கத்தை தர முழுமையான வாய்ப்பு தர வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தியது. இதையடுத்து மீண்டும் ஆஜராக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது நடந்த விசாரணையின்போது வக்கீல்களுடன் ஆஜராக தனவேலு எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்.

தற்போது இறுதியாக ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் சிவக்கொழுந்து நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து சட்டசபையில் நேற்று சபாநாயகர் அறையில் அவர் முன் தனவேலு எம்.எல்.ஏ. ஆஜரானார். அப்போது கொரோனா சூழலில் தனது வக்கீல்களால் வர முடியவில்லை என்பதால் கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக கடிதம் மூலம் தனது பதிலை தெரிவிப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அவரிடம் தெரிவித்தார்.இதன்பின் சபாநாயகர் அறையில் இருந்து வெளியே வந்த தனவேலு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கோர்ட்டு தெரிவித்ததன்படி எனக்கு விளக்கம் அளிப்பதற்கான முழுமையான வாய்ப்புகள் தரப்படவில்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளிடம் நேரடியாக வக்கீல் முன்னிலையில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் எனக்கு கடிதம் அனுப்பவில்லை. முதல்-அமைச்சரின் அழுத்தத்தின் பேரிலேயே அனுப்பி உள்ளார். காங்கிரசில் உள்கட்சி பூசல் உள்ளது. முதல்-அமைச்சர் மீது பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் அதிருப்தியில் உள்ளனர். அதை மறைக்கவும், என் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களை மிரட்டவும் முயற்சி நடக்கிறது.

காழ்ப்புணர்ச்சியால் என் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் துடிக்கிறார். இதில் காட்டும் அக்கறையை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்படும் இந்த நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்வதில் இருக்க வேண்டும். என்னை வைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார். தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் ஆட்சி, அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் கருதுகிறார். அதற்கு தன் கைப்பாவையாக இருக்கும் ஒருவரை தற்போது தலைவராக்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தூள் தூளாகும். அதை ஒட்ட பசை கூட கிடைக்காது.

அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார் ஆகியோர் முதல் அமைச்சர் மீது தற்போது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். என் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவர்களை சரிக்கட்டி விடலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் மக்கள் இந்த ஆட்சியை வெளியேற்ற முடிவு செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்