கோவை கோர்ட்டுகளில், ஒரே நாளில் புதிய வழக்குகள் தாக்கல் செய்வதற்காக நூற்றுக்கணக்கான மனுக்கள் குவிந்தன

கோவை கோர்ட்டுகளில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கான மனுக்கள் நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் குவிந்தன.

Update: 2020-06-03 22:49 GMT
கோவை,

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கோர்ட்டுகள் மூடப்பட்டன. முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் மனுக்கள் மட்டும் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3-ந் தேதி முதல் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கான மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் அறிவித்திருந்தார்.

அதன்படி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டு, சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல கோர்ட்டு, தொழிலாளர் கோர்ட்டு, விபத்து சிறப்பு கோர்ட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் புதிய வழக்கு தாக்கல் செய்வதற்கான மனுக்கள் நேற்றுக்காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தாக்கல் செய்யப்பட்டன.

நூற்றுக்கணக்கில் குவிந்த மனுக்கள்

இதற்காக கோர்ட்டு பிரதான வாயிலில் சிவில் வழக்குகளுக்கான மனுக்களும், மற்றொரு நுழைவு வாயிலில் கிரிமினல் வழக்குகளுக்கான மனுக்களும் போடுவதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எந்த கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டுமோ அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் மனுக்கள் போடப்பட்டன. இதற்காக கோர்ட்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மனுக்களை வாங்கினார்கள். பெரும்பாலான மனுக்கள் வக்கீல்கள் மூலம் போடப்பட்டன.

சிவில், குற்ற வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், தனி நபர் வழக்குகள் போன்ற புதிய வழக்குகளுக்கான மனுக்கள் நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் தாக்கல் செய்யப்பட்டதாக வக்கீல்கள் தெரிவித்தனர். அந்த மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டன. அவை நாளை(வெள்ளிக்கிழமை) தான் பிரிக்கப்படும். பொதுமக்களோ, வக்கீல்களோ கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மனுக்களை ஒவ்வொரு நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போடுவதற்கு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் தெரிவிக்கப்படும்

இதுகுறித்து கோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய வழக்கிற்கான மனுக்கள் பெறப்பட்டவை கோர்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளதா? எந்த தேதியில் விசாரணைக்கு வருகிறது? மேலும் ஏதாவது ஆவணங்கள் தேவைப்படுமா? என்பன போன்ற விவரங்கள் மனுதாரரின் செல்போன் அல்லது அவரது வக்கீல் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, இ-மெயில் மூலம் தெரியப்படுத்தப்படும். அதன்படி மனுக்கள் ஏற்கப்பட்டு வழக்குகள் நடத்தப்படும்.

மேலும் செய்திகள்