டிக்கெட் விவரங்களை வைத்து மண்டலம் தாண்டி வரும் ரெயில் பயணிகள் தீவிர கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தகவல்
மண்டலம் விட்டு மண்டலம் வரும் ரெயில் பயணிகளின் டிக்கெட் விவரங்களை கொண்டு சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையிலிருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்லும் ரெயில் பயணிகள் இ-பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவையில் இருந்து புறப்படும் 2 ரெயில்களும் மற்றொரு மண்டலத்துக்குள் செல்வதால் அதாவது சேலத்தை தாண்டி செல்லும் பயணிகள் அனைவரும் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும்.
இ-பாஸ் கேட்கப்படுவதில்லை
ஆனால் கடந்த 3 நாட்களாக கோவையில் இருந்து புறப்படும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் முன்பதிவு டிக்கெட் இருக்கிறதா? என்று டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்கிறார்கள். ஆனால் இ-பாஸ் பற்றி அவர்கள் கேட்பது இல்லை என்று கூறப்படுகிறது. ரெயில் நிலையத்தில் தெர்மல் ஸ்கேன் கொண்டு மட்டும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கு செல்லும் பயணிகளிடமும், அதே போல அந்த ஊர்களிலிருந்து கோவைக்கு வரும் பயணிகளிடமும் இ-பாஸ் கேட்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இ-பாஸ் இல்லாமல் ரெயிலில் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு சென்று விட முடியாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
ரெயில் பயணிகள் இ-பாஸ் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் அவர்கள் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்களை பற்றிய தகவல்களை ரெயில்வே அதிகாரிகள் எங்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். இதன்மூலம் டிக்கெட் விவரங்களை வைத்து வேறு மண்டலத்திலிருந்து வந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படு கிறது. அப்படி அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இ-பாஸ் எடுக்கப்படுவதின் முக்கிய நோக்கமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். அதாவது நோய் அதிகம் பாதித்த பகுதிகளிலிருந்து வருகிறவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு அதை பரப்பாமல் இருக்கிறார்களா? என்று உறுதி செய்து கொள்வதற்காகத் தான்.
20 சதவீதம் பேர்
மேலும் கோவையில் இருந்து முன்பதிவு செய்யும் பயணிகள் 20 சதவீதம் பேர் தங்கள் பயணத்தை ரத்து செய்து விடுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மற்றொரு மண்டலத்துக்கு சென்ற பிறகு 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு எங்கும் வெளியே செல்ல முடியாது என்பதற்காகத் தான் அவர்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவை ரெயில் நிலையத்திற்கு நேரடியாக வந்து டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது. முதலில் 10 டோக்கன் பெற்றவர்கள் உள்ளே சென்று டிக்கெட் எடுத்து வந்த பின்னர் அடுத்த 10 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள்.