உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை கோவை அவினாசி ரோட்டில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம் டெண்டர் விடும் பணி தொடங்கியது
கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,621 கோடியில் மேம்பாலம் அமைப்பதற்காக, டெண்டர் விடும் பணி தொடங்கியது.
கோவை,
கோவை அவினாசி ரோடு நகரில் முக்கிய சாலை என்பதால் தினமும் 1¼ லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விமானநிலையத்துக்கு செல்பவர்கள் பல சிக்னல்களில் நின்று செல்வதால் 20 நிமிடம் வரை தாமதம் ஆகிறது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில் கோவை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான மண் ஆய்வு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 கோடியே 4 லட்சம் செலவில் நடந்து முடிந்தது. இந்த மேம்பாலத்தை ரூ.900 கோடி செலவில் கட்டிமுடிக்க முன்பு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது செலவு தொகை மேலும் அதிகமாகும் என்று தெரியவந்ததை தொடர்ந்து திட்ட செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.1,621 கோடி
அவினாசி ரோடு மேம்பாலம் மொத்தம் ரூ.1,621 கோடியே 3 லட்சம் செலவில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கி 4 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிவடைந்துவிடும். மேம்பாலத்தின் அகலம் 17.25 மீட்டராகும். 4 வழிப்பாலமாக அமைக்கப்படுகிறது.
மொத்தம் 304 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளது. அண்ணாசிலை சந்திப்பு, நவஇந்தியா, ஹோப்காலேஜ், விமானநிலைய பகுதிகளில் வாகனங்கள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக சாய்வு தள பாதை வசதி அமைக்கப்படுகிறது. பீளமேடு போலீஸ் நிலையம் அருகிலேயேயும் இறங்குதளம் அமைக்கப்பட உள்ளது.
டெண்டர்விடும் பணி
இதற்காக 28 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேம்பால முதல்கட்ட திட்ட செலவுகளுக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இந்த மேம்பாலம் கட்டி முடித்த பின்னர் கோவையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், விம ானநிலையத்துக்கு, கோவையில் இருந்து வெளிப்பகுதிகளுக்கும் வாகனங்கள் எளிதில் செல்லும் நிலை ஏற்படும்.
மேம்பாலத்துக்கான டெண்டர் விடும் பணி கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.