கொரோனா சோதனை நடத்தினால்தான் அனுமதி என்று கூறியதால் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறை முன்பு விடிய விடிய காத்திருப்பு

கொரோனா சோதனை நடத்தினால்தான் அனுமதி என்று அதிகாரிகள் கூறியதால் கொலை வழக்கில் கைதான வாலிபர் அவினாசி சிறை முன்பு விடிய விடிய காத்திருந்தார்.

Update: 2020-06-03 05:39 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சிறு குற்றவழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்து வந்தனர். தற்போது இந்த சிறையில் கைதிகள் அதிகம் இருப்பதால் புதிதாக யாரையும் அனுமதிப்பது இல்லை. இதனால் போலீசார் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள கிளை சிறைக்கு சென்று விசாரணை கைதிகளை அடைக்கிறார்கள். தற்போது சிறையில் கைதிகளை அனுமதிக்கும்போது அவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை அறியும் சளி பரிசோதனையான ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட அறிக்கையுடன் வந்தால் மட்டுமே சிறைக்குள் அனுமதிக்கிறார்கள். இல்லையென்றால் கைதிகளை அனுமதிப்பது இல்லை.

ஸ்வாப் பரிசோதனை எடுத்தால் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அதிகபட்சம் 2 நாட்களுக்கு பிறகே முடிவுகளை மருத்துவத்துறையினர் அறிக்கையாக போலீசாருக்கு கொடுக்கிறார்கள். ஆனால் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஒருவரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவு அவசியம் என்று சிறைத்துறை அதிகாரிகள் உறுதியுடன் கூறியுள்ளதால் நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை சிறையில் அடைப்பதற்குள் போலீசார் திண்டாடி வருகிறார்கள்.

கோவையில் கொலை வழக்கு ஒன்றில் கைதான அசோக்குமாரை என்பவரை கோர்ட்டு உத்தரவு படி அவினாசி கிளை சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவினாசிக்கு வாகனத்தில் அழைத்துவந்தனர். அங்கு அவரை கிளை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அப்போது சிறைத்துறை அதிகாரிகள், அசோக்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே சிறையில் அடைக்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

விடிய விடிய காத்திருப்பு

பின்னர் அவர்கள் அசோக்குமாருடன் அந்த சிறை முன்பு விடிய விடிய வாகனத்திலேயே காத்திருந்தனர். அதன் பிறகு அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீசார் கூறும்போது, அசோக்குமாரின் ரத்தம் மற்றும் சளி மாதிரியின் பரிசோதனை அறிக்கை இன்று (புதன்கிழமை) மதியத்துக்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அறிக்கை வந்ததும், அவரை சிறையில் அடைக்க முடிவு செய்து உள்ளோம். தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் உள்ளார் என்றனர்.

மேலும் செய்திகள்