கடன் பெற்றுதருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூரில் சிறு தொழில் தொடங்க வங்கி மூலமாக கடன் பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-03 04:46 GMT
வீரபாண்டி, 

திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (வயது 48), பிரகாஷ் (46), ரவி (49). இவர்கள் 3 பேரும் திருப்பூர் குளத்துப்பாளையம் செல்வ லட்சுமி நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக வாடகை வீடு எடுத்து தங்கி வந்தனர். மேலும் வின்கேர் என்ற நிறுவனத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தங்கி இருக்கும் பெண்களிடம் சென்று சிறுதொழில் தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்றும் அதற்கான பணிகளை நாங்களே செய்து கொடுக்கிறோம் என்று தெரிவித்து வந்தனர்.

முதலில் ரூ.700 செலுத்தினால் ரூ.80 ஆயிரம் வரை கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், மேலும் எல்.இ.டி. பல்ப் செய்யும் எந்திரம் கொடுப்பதாகவும் அதன் மூலம் தினமும் ரூ.700 வருமானம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்து வந்தனர். இதனை நம்பி பல பகுதியில் வசிக்கும் பெண்கள் ரூ. 700 ரூபாயை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த கமலம் என்பவர், பணம் செலுத்தி பல நாட்களாகியும் கடன் மற்றும் எந்திரம் எதுவும் கிடைக்காததால், வின்கேர் நிறுவன அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் 3 பேரும் பதில் அளிக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார்.

மேலும் ஒருவர் கைது

புகாரின் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் ஆசை வார்த்தை கூறி பலரிடம் பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. பின்பு போலீசார் இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் ரவியை ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்