சரக்கு வாகனம் மோதி விவசாயி பலி மற்றொரு விபத்தில் சிறுமி சாவு
சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் சிறுமி இறந்தாள்.
கந்தர்வகோட்டை,
சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் சிறுமி இறந்தாள்.
விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம் பந்தவக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை(வயது 55). விவசாயியான இவரும், நடராஜன்(55), பெரியசாமி(55) ஆகியோரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பந்தவக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மட்டாங்கால் அருகே கருப்புக்கோவில் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி வந்த சரக்கு வாகனம், நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும், அதன் அருகில் நின்ற பிச்சை, நடராஜன் மீதும் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நடராஜன் பலத்த காயத்துடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தின் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டையை சேர்ந்த ஸ்டீபன்ராஜை(27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி சாவு
*அன்னவாசல் அருகே உள்ள பெருமநாட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் யோகதா(வயது 8). இவள் வீட்டில் இருந்து எதிர்புறம் உள்ள சாலையை கடந்துள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி நோக்கி சென்ற கார், யோகதா மீது மோதியது. இதில் யோகதா படுகாயம் அடைந்தாள். இதையடுத்து அவளை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே யோகதா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*புதுக்கோட்டை நகரப்பகுதியில் கொரோனா தொற்று தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி முக கவசம் அணியாத பொதுமக்கள், கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 பேர் காயம்
*அறந்தாங்கி அருகே மேல்நிலைபட்டியை சேர்ந்த 7 பேர் நேற்று சரக்கு வாகனத்தில் பனவயல் என்ற ஊருக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அந்த வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். உசிலம்பட்டியில் உள்ள முக்கத்தில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதில் மேல்நிலைபட்டியை சேர்ந்த முத்து(வயது 37), நாச்சியம்மை(28), உலகம்மை(30), மீனா(55), உடையம்மை(55), மல்லிகா(40), அடைக்கலம்(57) ஆகிய 7 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மல்லிகா, அடைக்கலம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் கண்ணாடி முக கவசங்களை ‘டீன்’ மீனாட்சி சுந்தரத்திடம், அரசு மருத்துவர் சங்கத்தினர் வழங்கினர்.