ராமநாதபுரத்தில் வாலிபர் மீது தாக்குதல்: அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய புகாரின் அடிப்படையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புதுஅக்ரகாரத்தை சேர்ந்தவர் மாரீசுவரன் (வயது 39). இவர் தனது நண்பர் முத்துகணேஷ் என்பவருடன் கடந்த மாதம் 26-ந்தேதி மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் காந்தாரி அம்மன்கோவில் தெரு பகுதியில் வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் சிறுவர்கள் வெடிபோட்டதில் அதிர்ச்சியடைந்த மாரீசுவரன் தரப்பினர் நிலைதடுமாறி விழுந்தார்களாம். இதுகுறித்து சிறுவர்களிடம் கேட்டபோது அந்த பகுதியை சேர்ந்த நகர் அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் தஞ்சிசுரேஷ் (48) என்பவர் வந்து மாரீசுவரன் தரப்பினரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தஞ்சிசுரேஷ் தனது ஆதரவாளரான ராமநாதபுரம் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்த முத்துபாண்டிக்கு தகவல் தெரிவித்தாராம். இதனை தொடர்ந்து அவர் அங்கு சிலருடன்வந்து மாரீசுவரன் தரப்பினரை செங்கல் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரீசுவரன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தஞ்சி சுரேஷ், முத்துபாண்டி, முதுனாள் சதீஷ் மற்றும் 8 பேர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தஞ்சி சுரேஷ் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.