மத்திய, மாநில அரசுகள் வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசு வலைகளை கொள்முதல் செய்ய வேண்டும்

பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசு வலைகளை பயன்படுத்தலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கொசுவலைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

Update: 2020-06-03 03:18 GMT
கரூர், 

பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசு வலைகளை பயன்படுத்தலாம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கொசுவலைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கரூர் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெட்டுக் கிளிகள்

கரூரில், பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் எஸ்.தங்கராஜூ முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் குப்பாராவ் கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிப்பது.

தற்போது, பிற மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கம் இல்லையென்றாலும் அதனை ஒழித்துக் கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

கொசு வலைகள்

கரூரில் பாரம்பரியமான முறையில் கொசு வலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கொசு வலைகள் அதிகளவு தேக்கம் அடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை பிடிக்க கரூரில் உற்பத்தி செய்யப்படும் கொசு வலைகளை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலம், விவசாயிகள் மட்டுமின்றி கொசு வலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பயன்பெறுவர். மேலும், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து மனித உயிர்களை காக்கும்பொருட்டு கொசு வலைகளை கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்