திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை திரும்ப வழங்கும் பணி தொடங்கியது

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணத்தை திரும்ப வழங்கும் பணி தொடங்கியது.

Update: 2020-06-03 03:07 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணத்தை திரும்ப வழங்கும் பணி தொடங்கியது.

ரெயில்கள் ரத்து

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 30-ந் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரெயில்களில் பயணம் செய்ய பயணிகள் ஏராளமானவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், அவர்களுக்கான டிக்கெட் கட்டணம் முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

டிக்கெட் கட்டணம்

அதன்படி, நேற்று முதல் திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட 6 ரெயில் நிலையங்களில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி, திருச்சி ஜங்ஷன், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் எந்தெந்த தேதியில் பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அட்டவணை வெளியிடப்பட்டது.

தேதி வாரியாக விவரம்

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் மார்ச் மாதம் 31-ந் தேதிவரை முன்பதிவு செய்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கும் பணி தொடங்கியது. அதற்கான சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டிருந்தது. டிக்கெட் ரத்து செய்யும் பயணிகள் சமூக இடைவெளியுடன் கவுண்ட்டர்கள் முன்பு வரிசையாக நின்று பயண கட்டணத்தை திரும்ப பெற்று சென்றனர்.

இதுபோல ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை முன்பதிவு செய்தவர்கள் வருகிற 6-ந் தேதியில் இருந்தும், ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை முன்பதிவு செய்த பயணிகள் வருகிற 11-ந் தேதி முதல் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மே மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை பதிவு செய்தவர்கள் வருகிற 16-ந் தேதியில் இருந்தும், மே மாதம் 16-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை முன்பதிவு செய்தவர்கள் வருகிற 21-ந் தேதி முதல் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், நேற்று முன்தினம்(1-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதிவரை முன்பதிவு செய்துள்ள பயணிகள் வருகிற 26-ந் தேதி முதல் கட்டணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்