திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டின்படி 54 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 54 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணைவேந்தர் மணிசங்கர் கூறி இருப்பதால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-03 02:51 GMT
திருச்சி, 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 54 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணைவேந்தர் மணிசங்கர் கூறி இருப்பதால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

54 பேராசிரியர்கள் நியமனம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள 28 துறைகளில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என மொத்தம் 54 பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 8 ஆண்டுகளாக காலியாக உள்ள இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசின் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேர்காணல் நடத்தி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் எதிர்ப்பு

இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு துறையும் ஒரு அலகாக கருதப்பட்டு 69 சதவீத இட ஒதுக்கீடு 200 புள்ளி இன ரோஸ்டர் முறையில் பணியிடம் நிரப்புவது தான் நடைமுறையில் உள்ளது.

இதற்கு எதிராக ஒட்டு மொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி பேராசிரியர் பணி நியமனம் கூடாது என்று கூறி வருகிறார்கள். அதே நேரம் யு.ஜி.சி. வழிகாட்டுதல் முறைப்படி காலி பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் கருத்து தெரிவித்து உள்ளது.

துணைவேந்தர் பதில்

பேராசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கரிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டபோது ‘பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை ரோஸ்டர் முறையில் அரசின் வழிகாட்டுதல் படி 69 சதவீத இட ஒதுக்கீடு 200 புள்ளிகள் என்ற அடிப்படையில் சரியானபடி தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாக கருதி ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது.’ என்றார்.

துணைவேந்தர் தெரிவித்து உள்ள கருத்துக்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 பேராசிரியர் பணியிடங்கள் நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்