நெருங்கி பழகிய படங்களை வெளியிடுவதாக கூறி முகநூல் காதலியிடம் பணம் கேட்டு மிரட்டல் குமரி வாலிபர் கைது
நெருங்கி பழகிய படங்களை வெளியிடுவதாக கூறி முகநூல் காதலியிடம் பணம் கேட்டு மிரட்டிய குமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அஞ்சுகிராமம்,
நெருங்கி பழகிய படங்களை வெளியிடுவதாக கூறி முகநூல் காதலியிடம் பணம் கேட்டு மிரட்டிய குமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முகநூல் காதல்
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த இளம் பெண், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2018-ம் ஆண்டு நர்சாக பணி செய்து வந்தார். அப்போது அவருக்கும், அழகியபாண்டியபுரம் காட்டுப்புதூரை சேர்ந்த மர்பின் தனேஷ் (வயது 26) என்பவருக்கும் முகநூல் வழியாக காதல் ஏற்பட்டதாகவும், அவர்கள் காதலித்த சமயத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு குவைத்தில் நர்சு வேலை கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர் குவைத் செல்வதற்கு மர்பின் தனேசும் உதவி செய்ததாக தெரிகிறது. அதன்பிறகு இருவரும் வாட்ஸ்-அப் மூலம் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் தனேசிடம் பேசுவதை அந்தப் பெண் குறைத்து வந்துள்ளார். இதை உணர்ந்த மர்பின் தனேஷ் அதுபற்றி விசாரித்தபோது அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மிரட்டல்
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்தப் பெண்ணுடன் நெருங்கி பழகிய புகைப்படத்தை திருமணம் பேசி முடிவு செய்த வாலிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை காதலித்தது குறித்தும் அந்த வாலிபரிடம் கூறியிருக்கிறார்.
அதோடு நர்சுக்கும், சில புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார். மேலும் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றினால் என்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. நர்சின் தாயிடமும் சென்று மகளை திருமணம் செய்துவைக்கும்படி கேட்டு பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
பரபரப்பு
உடனே நர்சின் தாயார் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், “என் மகளை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி அவருடன் மர்பின் தனேஷ் நெருங்கிப் பழகினார். அப்போது அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். இப்போது மகள் குவைத்தில் நர்சாக பணிபுரிந்து வரும் நிலையில் அவருடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகவும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்பின் தனேஷை கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே காசி என்ற சுஜி (26) பல பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்த சம்பவம் ஓய்வதற்குள் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.