தேனி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
தேனி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் வசிப்பவர் பெருமாள்சாமி. இவருடைய மனைவி நிஷா (வயது 24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிஷா நேற்று முன்தினம் தனது வீட்டில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நிஷாவின் தந்தை போடியை சேர்ந்த அய்யர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மருமகனின் குடும்பத்தினர் நிஷாவிடம் வரதட்சணை கேட்டு வந்ததாகவும், ஒரு மாதத்துக்கு முன்பு சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது தற்கொலை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.