120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை மராட்டியம்-குஜராத் இடையே ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது - மும்பையில் தயார் நிலையில் மீட்புப்படை

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் மராட்டியம்- குஜராத் இடையே இன்று கரையை கடக்கிறது. இதனால் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2020-06-02 23:54 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகின்றன.

முதலில் கேரளாவில் தொடங்கும் இந்த மழை பின்னர் படிப்படியாக கர்நாடகம், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யத் தொடங்கும்.

இந்த ஆண்டு வழக்கம் போல் கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

‘நிசர்கா’ தீவிர புயலாக மாறி வடக்கு மராட்டியம்-தெற்கு குஜராத் இடையே ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே இன்று (புதன்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மராட்டியம்தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

மும்பை நகர், மும்பை புறநகர், தானே, பால்கர், ராய்காட், சிந்துதுா்க், ரத்னகிரி ஆகிய கடலோர மாவட்டங்கள் இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

16 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு, 10 குழுவினர் கடலோர மாவட்டங்களில் மீட்பு பணிக்காக களமிறக்கப்பட்டு உள்ளனர். 6 மாநில பேரிடர் மீட்பு படையிரும் தயார் படுத்தப்பட்டு உள்ளனர். மும்பையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும். மரம் விழுதல் மற்றும் நிலச்சரிவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

மந்திராலயாவில் கட்டுப்பாட்டு அறை மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மராட்டியம் கொரோனாவால் போராடி வரும் நிலையில், நிசர்கா புயல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்திலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா நேற்று தேசிய பேரிடர் மீட்புப்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே நிசர்கா புயல் காரணமாக மும்பையில் நேற்று மாலை 6 மணியளவில் தாராவி, தாதர், செம்பூர், சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதேபோல நவிமும்பை, தானே உள்ளிட்ட மும்பையையொட்டி உள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்து உள்ள மழை மக்களை குளிர்வித்து உள்ளது. எனினும் இன்று புயல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் மழையால் கொரோனா ெதாற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்