830 தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர் கன்னியாகுமரியில் இருந்து அசாமுக்கு சிறப்பு ரெயில்
கன்னியாகுமரியில் இருந்து 830 வடமாநில தொழிலாளர்களுடன் அசாமுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.;
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் இருந்து 830 வடமாநில தொழிலாளர்களுடன் அசாமுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
சிறப்பு ரெயில்கள்
குமரி மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் தனி ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாகர்கோவில் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் எஸ்.எல்.பி. பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் அசாம் மாநிலத்துக்கு இயக்குவதற்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் பகுதியில் இருந்து 330 வடமாநில தொழிலாளர்களும், நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் இருந்து 500 தொழிலாளர்கள் என மொத்தம் 830 பேர் அரசு பஸ்கள் மூலம் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
காங்கிரஸ் உதவி
அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், புலம் பெயர் தொழிலாளர்கள் நல மைய ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான ராபர்ட் புரூஸ் வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் வட்டாரத்தலைவர் வைகுண்டதாஸ், முன்னாள் வட்டாரத்தலைவர் விஜய், ஆளூர் தலைவர் வில்லியம் ஜாண், திருத்துவதாஸ், செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ரெயில்நிலையத்துக்கு வந்த அவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர். அதைதொடர்ந்து அவர் கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
நெல்லையில் இருந்து...
மாலை 3.40 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த ரெயில் இரவு நெல்லை சென்றது. அங்கு நெல்லை இருந்து 130 பேரும், தென்காசி 120, தூத்துக்குடி 343, விருதுநகர் 123 என குமரி மாவட்டத்தில் இருந்து சென்றவர்களுடன் சேர்த்து மொத்தம் 1546 வடமாநில தொழிலாளர்கள் செல்கிறார்கள். இந்த ரெயில் நெல்லை, மதுரை, சேலம், ரேனிகுண்டா, குவாத்தி வழியாக வருகிற 5-ந்தேதி மாலை 6 மணிக்கு அசாமி மாநிலம் திப்புருகருக்கு சென்றடைகிறது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பயிற்சி கலெக்டர் ரிசப் கங்கலியா, கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.