திண்டுக்கல் மாவட்டத்தில் இ-பாஸ் பிரச்சினையால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் இ-பாஸ் பிரச்சினையால் வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
வடமதுரை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து அந்த மண்டலங்களுக்குள் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஒரு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களுக்கு சென்று வர இ-பாஸ் தேவையில்லை. ஆனால் மற்ற மண்டலங்களில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி, கல்பட்டி உள்ளிட்ட ஊர்கள் திண்டுக்கல், திருச்சி மண்டலங்களில் இடம்பெறுகின்றன. இதனால் அந்த ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கண்டிப்பாக எடுக்க வேண்டும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இ-பாஸ் பிரச்சினை
மேலும் அந்த ஊர்களில் இருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள் மாவட்ட எல்லையை கடந்து தான் சென்று வர வேண்டும். இ-பாஸ் பிரச்சினை காரணமாக அவர்கள் வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து கல்பட்டி, நடுப்பட்டி வரை சென்ற பஸ்கள் தற்போது திண்டுக்கல் மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டியுடன் திரும்பி விடுகின்றன.
திருச்சி மற்றும் மணப்பாறையில் இருந்து அய்யலூருக்கு இயக்கப்படும் பஸ்களும் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியுடன் திரும்பி விடுகின்றன. இதனால் அதில் பயணம் செய்பவர்கள் சோதனைச்சாவடி அருகே இறங்கி, தங்கள் ஊருக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்துக்கு நடந்தே சென்று ஏறிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அந்த ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அய்யலூர், தங்கம்மாபட்டி, கல்பட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட மாவட்ட எல்லை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் சிரமமின்றி வேலைக்கு சென்றுவர முடியும் என்றனர்.