கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் நாடார் சங்கம் கோரிக்கை
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று நாடார் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.
கோவை,
கோவை நாடார் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம் கோவை நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.இருதயராஜா வரவேற்றார். பொருளாளர் ஆர்.எஸ்.கணேசன் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்
கொரோனா பரவுவதை தடுக்க அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் பயன் பெறும் வகையில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. கோவையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை சந்திக்கவும், தொழில் நிமித்தமாக சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கவும், அதில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரெயில் விடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை 8 போக்குவரத்து மண்டலங்களாக பிரித்து மற்ற மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் கே.டி.சோமசுந்தரம், செயலாளர்கள் பொன் செல்வராஜ், அன்புராஜ், செயற்குழு உறுப்பினர்கள் பொன் பாண்டியன், அருள், சகாதேவன், ஆனந்தபாண்டி, ராஜ்குமார், காமராஜ், சிவசேகர், கிளிகுமார், வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.