ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடங்கியது

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் தொடங்கியது.

Update: 2020-06-02 06:14 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு தேவையான குடிநீர் பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து வினியோகம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை மேற்கொள்ள ரூ.484 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

வரதநல்லூரில் இருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீர் பெரிய குழாய்கள் வழியாக ஈரோடு சூரியம்பாளையம், வ.உ.சி. பூங்கா ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள தரைமட்ட தொட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், வ.உ.சி. பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும் புதிதாக கட்டப்பட்டது. அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஈரோட்டில் ஏற்கனவே உள்ள 46 பழைய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், புதிதாக 21 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன.

வரதநல்லூரில் குடிநீர் நீரேற்றம் செய்யும் கட்டுமான பணிகளும், சூரியம்பாளையம், வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களில் பிரமாண்ட குடிநீர் தொட்டிகள் கட்டும் பணிகளும் நிறைவு பெற்றன. இதையடுத்து வரதநல்லூரில் இருந்து பிரமாண்ட தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டமும், அங்கிருந்து மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பும் சோதனை ஓட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சோதனை ஓட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், சோதனை ஓட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 5 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள இணைப்புகளை கொடுக்க சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இதற்கான திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் புதிதாக 21 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட வேண்டியதில், 15 தொட்டிகள் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது.

இந்தநிலையில் சோதனை ஓட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. சூரியம்பாளையம், வ.உ.சி. பூங்கா ஆகிய தொட்டிகளுக்கு நேரடியாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் சூரியம்பாளையத்தில் இருந்து ஓரிரு நாட்களுக்குள் மற்ற மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். வ.உ.சி. பூங்காவில் இருந்து 10 நாட்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். அப்போது வீதிகளில் பதிக்கப்பட்ட குழாய்கள் முறையாக உள்ளனவா? தண்ணீர் செல்லும் அழுத்தம் உள்ளதா? போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

வடமாநில தொழிலாளர்கள் மூலமாக ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பணிகளை மேற்கொள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இருந்தாலும் வருகிற அக்டோபர் மாதத்துக்குள் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்யும் பணிகளை முடிக்கும் வகையில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறோம்.

சோதனை ஓட்டம் முழுமையாக நடத்தப்படும்போது ஈரோடு வைராபாளையம் உள்ளிட்ட இடங்களில் நீரேற்றம் செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்