வெட்டுக்கிளிகள் பற்றி விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்; கலெக்டர் அண்ணாதுரை பேச்சு

வெட்டுக்கிளிகள் தாக்கம் பற்றி விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறியுள்ளார்.

Update: 2020-06-02 05:09 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராபின்காஸ்ட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் 350 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருபவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அந்த வகையில் 150 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு காலத்திலும் விவசாய பணியானது தொய்வு இல்லாமல் நடந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை அழிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் விவசாயிகளாகிய நீங்கள் உங்கள் வயல்களுக்கு காவலனாக இருக்க வேண்டும். சாதாரண வெட்டுக்கிளிகளை பார்த்தாலும், ஏதேனும் பாலைவன வெட்டுக்கிளிகளை பார்த்தாலும் அதன் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த வெட்டுக்கிளிகளை அழிக்க மருந்து தெளிப்பார்கள். இதனை கண்டறிந்து உடனடியாக அழிக்கவும், விவசாயிகளுக்கு உதவி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்திற்கு இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வரக்கூடிய வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அதனை தடுக்க தீயணைப்புத்துறை, வேளாண்மைத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு, மாலத்தியான் என்ற மருந்தை தருவதாக கூறியுள்ளது. இதை பயன்படுத்தி வெட்டுக்கிளிகள் அழிக்கப்படும். எனவே விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்