திருச்சியில் குறைந்த அளவிலான பயணிகளுடன் இயங்கிய அரசு பஸ்கள்

குறைந்த அளவிலான பயணிகளுடன் திருச்சியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-06-02 03:46 GMT
திருச்சி,

குறைந்த அளவிலான பயணிகளுடன் திருச்சியில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்கள் இயக்க உத்தரவு

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு ஐந்தாவது முறையாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பில் மிக முக்கியமானது ஜூன் 1-ந்தேதி முதல் 50 சதவீத அரசு பஸ்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் என்பது தான்.

இதற்காக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் 7 மற்றும் 8-வது மண்டலங்களில் உள்ளன. மற்ற மாவட்டங்கள் 1 முதல் 6 மண்டலங்களில் இடம் பெற்று உள்ளன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்கள் 4-வது மண்டலத்தில் உள்ளன.

இந்த மாவட்டங்களில் அரசு உத்தரவின்படி நேற்று காலை முதல் அரசு பஸ்கள் இயங்க தொடங்கின. திருச்சி மாவட்டத்தில் மட்டும் உள்ள மொத்த பஸ்களின் எண்ணிக்கை 660. இதில் டவுன் பஸ்கள் 180, புறநகர் பஸ்கள் 150 என மொத்தம் 330 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உடல் பரிசோதனை

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள புறநகர் பணிமனையில் அரசு பஸ் போக்குவரத்தினை மண்டல மேலாளர் ராஜ்மோகன் நேற்று காலை தொடங்கி வைத்தார். பணிக்கு வந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தானியங்கி கிருமி நாசினி கருவி மூலம் தங்களது கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே பஸ்சில் ஏறி அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

அதன்பின்னர் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்திற்கு ஓட்டிச்செல்லப்பட்டன. டவுன் பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தின் வெளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக மாநகராட்சி சார்பில் மத்திய பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

குறைந்த அளவில் பயணிகள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து முசிறி, தொட்டியம், பெட்டவாய்த்தலை, லால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய இடங்களுக்கு குறைந்த அளவிலான பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. டவுன் பஸ்கள் மெயின்கார்டு கேட், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், விமான நிலையம், பொன்மலை ஆகிய இடங்களுக்கு உறையூர், தில்லைநகர், மற்றும் பாலக்கரை வழியாக இயக்கப்பட்டன.

3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பயணிகள் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் அமரக்கூடிய இருக்கைகளில் ஒருவர் மட்டும் உட்கார வைக்கப்பட்டார். பஸ்சில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக கண்டக்டர் பயணியின் கையில் கிருமிநாசினி தெளித்து கை கழுவ வைத்தார்.

எல்லை வரை சென்ற பஸ்கள்

திருச்சியில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில் பயணிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். ஆனால் அந்த பஸ்கள் திருச்சி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி வரை தான் செல்லும். அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அரசு பஸ்சில் ஏறி மதுரைக்கு செல்லலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கண்டக்டர்கள் பயணிகளை ஏற்றி சென்றனர். இதேபோல் திருச்சி மாவட்டத்தின் அண்டை மாவட்ட எல்லைகள் வரை மற்ற பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் திருச்சி மத்திய பஸ் நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி களையிழந்து காணப்பட்டது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், வேளாங்கண்ணிக்கு சென்ற பஸ்களில் பயணிகள் வரிசையில் நின்று ஏறிச்சென்றனர்.

சத்து மாத்திரை

அரசு பஸ்கள் போக்குவரத்து தொடர்பாக திருச்சி மண்டல பொது மேலாளர் ராஜ்மோகன் கூறியதாவது:-

அரசு உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படியும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். அனைத்து பணிமனை நுழைவு வாயிலிலும் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கும் சோப் ஆயில் மூலம் கை கழுவியும், சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்த பின்னரே பணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அனைத்து கிளைகளிலும் தொழிலாளர்களுக்கு தினமும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்திற்கு தலா 3 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் தலா 4 சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முக கவசம், கையுறையும் வழங்கப்பட்டு உள்ளது.

34 பயணிகளுக்கு அனுமதி

ஒரு பஸ்சில் அதிக பட்சமாக 34 பயணிகள் தான் ஏற்றி செல்லப்படுவார்கள். பயணிகள் அமர்வதற்காக இருக்கைகளில் குறியீடு செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். நடத்துனர்கள் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது கைவிரல் ஈரப்பதத்திற்காக நாக்கில் எச்சில் தொட்டு பயன்படுத்துவதை தவிர்க்க ஒவ்வொரு நடத்துனருக்கும் ஸ்பான்ஞ்ச் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பயணி பேட்டி

திருச்சியில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக ஒரு பஸ்சில் ஏறி அமர்ந்த பெரியராஜா என்ற பயணி கூறுகையில், நான் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்கிறேன். ஊரடங்கின் காரணமாக 2 மாதமாக வேலை இல்லை. இன்று (நேற்று) தான் பணிக்கு செல்கிறேன். நான் பணிக்கு செல்வதற்கு அரசு பஸ் மிகவும் உதவியாக உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்