கூடலூர் முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு

கூடலூர் முல்லைப்பெரியாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-06-02 00:56 GMT
கூடலூர், 

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18-வது வார்டு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கவுதம் (வயது 19). இவரும், கூடலூர் பஸ் நிலையம் பின்புறம் வசிக்கும் தச்சுத்தொழிலாளியான பாஸ்கரன் மகன் பிரகதீஸ்வரன் (17) என்பவரும் நண்பர்கள். பிரகதீஸ்வரன் தேனி பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டயப்படிப்பு படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கூடலூரை சேர்ந்த தங்களின் நண்பர்கள் கேசவன், ஸ்ரீஜித் ஆகியோருடன் நாயக்கர்தொழு அருகில் உள்ள முல்லைப்பெரியாறு மரப்பாலம் பகுதியில் நேற்று குளிக்க சென்றனர். பாலத்துக்கு அருகில் ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.

நீரில் மூழ்கி சாவு

அப்போது கவுதம், பிரகதீஸ்வரன் இருவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றனர். திடீரென அவர்கள் நீரில் மூழ்கினர். அவர்களால் ஆழமான பகுதியில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால், மற்ற இருவரும் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களிடம் தண்ணீருக்குள் 2 பேரும் மூழ்கிய விவரத்தை நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் கூடலூர் ஊருக்குள் இருந்தும் மக்கள் பலர் அங்கு குவிந்தனர். பலரும் தண்ணீருக்குள் இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்