ஊரடங்கிற்கு பிறகு போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில் அரசு பஸ் மோதி விவசாயி பலி குத்தாலம் அருகே பரிதாபம்
ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில் அரசு பஸ் மோதி விவசாயி பலியானார்.
பாலையூர்,
ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில் அரசு பஸ் மோதி விவசாயி பலியானார்.
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் அருகே நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
அரசு பஸ் மோதியது
திருவாரூர் மாவட்டம் வேலன்குடி கீழபடுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 60). விவசாயி. இவர் திருவாரூரில் இருந்து தேரழுந்தூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்தார்.
பின்னர் அவர், தனது தங்கை மகள் காவியாவை (பிளஸ்-2 தேர்வு எழுதி யுள்ளார்) அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில், மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டு இருந்தார். குத்தாலத்தை அடுத்த தொழுதாலங்குடி குளக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பஸ், ரத்தினம் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
விவசாயி பலி
இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காவியாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில்...
ஊரடங்கிற்கு பிறகு 68 நாட்கள் கழித்து நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. போக்குவரத்து தொடங்கிய முதல் நாளான நேற்று அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.