பேராவூரணி அருகே, குழந்தை இல்லாததால் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயி கைது
பேராவூரணி அருகே குழந்தை இல்லாததால், மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.;
பேராவூரணி,
பேராவூரணி அருகே குழந்தை இல்லாததால், மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை இல்லை
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் உதயராஜன்(வயது45) விவசாயி. இவருக்கும், ஆவணம் பகுதியைச் சேர்ந்த சசிகலாவுக்கும்(33), கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால் இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
அப்போது அவருக்கு பின்புறமாக வந்த உதயராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சசிகலாவின் பின் தலையில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சசிகலா ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பேராவூரணி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயராஜனை கைது செய்தனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.