கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் தந்தையை குத்தி கொன்ற மகன் போலீசார் விசாரணை
கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் தந்தையை மகனே குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
குடிபோதையில் தந்தையை மகனே குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கட்டிட தொழிலாளி
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. கூலித்தொழிலாளியான திவாகருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திவாகர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தந்தை முருகனிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திவாகர் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார். அப்போது திவாகருக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குத்தி கொலை
இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திவாகர் வீட்டில் இருந்து தலைமுடியை சிக்கு எடுக்கும் சிறிய கம்பியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் முருகன் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதைபார்த்து அதிர்ச்சியடைந்த திவாகர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். தந்தையை கொன்றுவிட்டோமே என்று கதறி அழுதார். தந்தையை கொலை செய்தது தெரியவந்தால் தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று பயந்துபோன திவாகர் தனது தந்தை திடீரென இறந்துவிட்டார் என்று உறவினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடலை தகனம் செய்ய ஏற்பாடு
இதையடுத்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து முருகனின் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அவருடைய உடலை தூக்குவதற்கு சில மணி நேரங்களில் இவர் இறப்பு குறித்தும், திவாகரின் நடவடிக்கைகள் குறித்து உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அத்துடன் முருகனின் உடலில் காயங்கள் இருப்பதையும் உறவினர்கள் பார்த்தனர்.இதுகுறித்து உறவினர்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திவாகரிடம் விசாரணை நடத்தினர். இதில் தந்தையை மகனே குடிபோதையில் குத்தி கொன்றது தெரியவந்தது. பின்னர் முருகனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து திவாகர், முருகனின் மனைவி சித்ரா உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் தந்தையை குடிபோதையில் மகனே குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.