இன்று முதல் 15-ந் தேதி வரை மீன் பிடிக்க அனுமதி: நள்ளிரவில் கடலுக்கு சென்ற குளச்சல் விசைப்படகுகள்

இன்று முதல் 15-ந் தேதி வரை மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Update: 2020-06-01 06:57 GMT
குளச்சல்

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க, மத்திய அரசு 60 நாட்கள் தடை விதிக்கும். இந்த தடைகாலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக கடைபிடிக்கப்படும். குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுமரங்கள் மட்டும் வாரத்திற்கு 4 நாட்கள் மீன் பிடிக்க செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கட்டுமரங்கள் மட்டும் மீன் பிடித்து வருகிறது.

இந்தநிலையில் குமரி மேற்கு மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே ஊரடங்கால் கடந்த 2 மாதமாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் வழக்கமான மீன்பிடி தடை காலத்தை அரசு ரத்து செய்ய விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தடைகாலம் 60 நாளில் இருந்து 45 நாளாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 நாள் மட்டும் மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் ஒருசில மீனவர்கள் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக தங்களது படகுகளை தயார் செய்து வந்தனர்.

அதாவது, விசைப்படகுகளுக்கு தேவையான டீசல், ஐஸ், தண்ணீர் போன்றவைகளை படகில் ஏற்றும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். 2 மாதங்களுக்கு பிறகு நள்ளிரவில் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். இதனால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்