திருச்சியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ரூ.3½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ரூ.3½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-06-01 05:26 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வயலூர் ரோடு சீனிவாசநகரை சேர்ந்த முருகன் மேற்பார்வையாளராகவும், கார்த்தி, ரமேஷ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று காலை 9.45 மணி அளவில் மேற்பார்வையாளர் முருகன் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு இல்லாமல் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையின் ஷட்டரை தூக்கிவிட்டு உள்ளே சென்றனர். அங்கு கடைக்குள் கம்பியினால் ஆன கேட் திறக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது, நேற்று முன்தினம் விற்பனை செய்த பணம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 360 கொள்ளை போய் இருந்தது. உடனே இதுகுறித்து ஊழியர்கள் கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் கடைக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைவிரல் ரேகைகள் பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். இந்த டாஸ்மாக் கடையில் 2 மேற்பார்வையாளர்கள் உள்பட 8 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். முதல்நாள் இரவு கடையில் வியாபாரம் முடிந்த பின்னர், வசூல் பணத்தை கடையின் உள்ளே கல்லாப்பெட்டியின் கீழ்பக்கம் யாரும் கண்டு பிடிக்காத வகையில் பணத்தை வைத்து மூடி அதை சுற்றி மதுபான பாட்டில்களின் பெட்டிகளை அடுக்கி வைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெட்டிகளை எடுத்துவிட்டு கல்லாப்பெட்டியை திறந்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்