காதல் தோல்வி: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

கோத்தகிரி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-06-01 03:00 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொட்டகம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் ரஞ்சித்குமார்(25). திருமணம் ஆகவில்லை. தொழிற்கல்வி முடித்துவிட்டு, டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

இதற்கிடையில் தனக்கு மனது சரியில்லை என்று கூறிவிட்டு, அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று, அங்கேயே தங்கியிருந்தார்.

தூக்கில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலையில் அவரது பாட்டி வழக்கம்போல் கூலி வேலைக்கு செல்ல தயாராகினார். அப்போது ரஞ்சித்குமாரின் அறை கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் தட்டி பார்த்தும், கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்தார். உடனே ஜெயசீலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் ரஞ்சித்குமார் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி மற்றும் தந்தை ஜெயசீலன் கதறி அழுதனர்.

காதல் தோல்வி

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோத்தகிரி போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் ரஞ்சித்குமாரின் செல்போனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்’ யாரும் காதலிக்காதீர்கள், காதல் திருமணமும் செய்து கொள்ளாதீர்கள் என்று பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சித்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், காதலில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டு இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்