சேலம் கோட்டத்தில் இன்று முதல் 1,040 அரசு பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 1,040 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-06-01 02:22 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் அன்று முதல் பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வந்தனர்.

இதற்கிடையே கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் கடந்த வாரம் முதல் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின. இதனால் தமிழகத்தில் எப்போது பஸ்கள் ஓடும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், 5-ம் கட்டமாக ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து வசதிக்காக 8 மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலத்திற்குள் மட்டும் 50 சதவீதம் அரசு பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 700 அரசு பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் 300 தனியார் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் இருந்து நாமக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 68 நாட்களுக்கு பிறகு சேலத்தில் இருந்து சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் 2 ஆயிரத்து 80 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் 50 சதவீதமான 1,040 பஸ்களை நாளை (இன்று) முதல் இயக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே அனைத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பணியில் சேருவதற்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பஸ்சிலும் அதிகபட்சமாக 60 சதவீத பயணிகளை மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முககவசம் இல்லாத பயணிகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேபோல் டிரைவர், கண்டக்டருக்கு தகுந்த நோய் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

தற்போது மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படும். பஸ் கட்டணம் குறித்து புதிதாக எந்த அறிவிப்பும் வராததால் பழைய கட்டணத்தில் பஸ்கள் இயக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதியில் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பஸ்களை தயார் படுத்தும் பணியிலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பஸ் போக்குவரத்து தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி அரசின் விதிமுறைகளின்படி நாளை (இன்று) முதல் நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை 397 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் பொது போக்குவரத்தை நடைமுறைபடுத்தும் பொருட்டு சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங் களை உள்ளடக்கி 1-வது மண்டலத்தின் பகுதிகளிலும் அருகிலுள்ள மற்ற மாவட்டங்களின் எல்லை பகுதி வரையிலும் பஸ்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், முக கவசம் அணிவதுடன், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பஸ்சில் பின்படிக்கட்டு வழியாக ஏறி முன்படிக்கட்டு வழியாக இறங்கிடுமாறும் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பஸ்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் போதும், பஸ் சென்று வரக்கூடிய ஒவ்வொரு நடையிலும் கட்டாயம் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளில் மணிக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், பஸ் நிலையங்களில் பஸ் நுழைவு வாயில் மற்றும் வெளியில் செல்லும் வழி ஆகியவற்றில் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைத்து கைகழுவுவதற்கான பேசன்கள் பொருத்தி பயணிகளுக்கு கைகழுவுவதற்கான வசதிகளை கட்டாயம் ஏற்படுத்திட வேண்டும். பஸ்களில் பயணிக்கும் பயணிகளை கட்டாயம் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். முக்கிய பஸ் நிலையங்களில் சுகாதாரத்துறையின் மூலம் டாக்டர் மற்றும் சுகாதார ஆய்வாளரை கொண்ட முகாம் அமைத்து பயணிகளுக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்