தன்னிடம் புகார் தெரிவித்த போலீஸ்காரரின் பணியிடமாற்றம் ரத்து செய்யப்பட வேண்டும் முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் கடிதம்

தன்னிடம் புகார் தெரிவித்த போலீஸ்காரரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரி தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-06-01 01:04 GMT
மும்பை,

பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில தினங்களுக்கு முன் வாஷிம் சென்று இருக்கிறார். அப்போது அங்குள்ள சோதனைசாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பட்னாவிசிடம் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், முககவசம் மற்றும் கிருமிநாசினி எதுவும் சரியாக வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நீங்களே முதல்-மந்திரியாக இருந்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், பட்னாவிசிடம் போலீஸ்காரர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பட்னாவிசுடன் பேசிய அந்த போலீஸ்காரர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர் தனது சக போலீசாரின் நலனை கருத்தில் கொண்டே குறைபாடுகளை தெரிவித்தார். எனவே அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.

இதுபற்றி பட்னாவிஸ் கூறுகையில், சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரரை கடந்த 17-ந் தேதி சந்தித்தேன். அவரை 28-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு கின்ஹிராஜாவில் இருந்து தனாஜ் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளார். இது அநீதி. இந்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பபட வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்