பாகனை கொன்றதால் திருப்பரங்குன்றம் கோவில் யானை வனப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது
திருப்பரங்குன்றம் கோவில் யானை வனப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை தெய்வானை திருவிழாக்களில் சாமி புறப்பாட்டில் வலம் வருதல், சரவண பொய்கையில் இருந்து தினமும் புனித நீர் எடுத்து வருதல் போன்ற பணியில் அவ்வப்போது ஈடுபட்டாலும் பக்தர்கள் அவ்வையிடம் நெருங்குவது போல கிட்ட செல்ல முடியாத நிலையில் ஆக்ரோஷமாகவே இருந்து வந்தது. மேலும் கடந்த ஆண்டில் பாகன்கள் கணபதிமுருகன், கனகசுந்தரம், உதவியாளர் சிதம்பரம் ஆகியோரை அடுத்தடுத்து தாக்கியது. அதில் கணபதி முருகனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி மாலையில் குளிக்க வைக்க சென்ற போது தான் தெய்வானை திடீரென்று ஆக்ரோஷப்பட்டு தும்பிக்கையால் பாகன் காளி என்ற காளிதாசை தூக்கி சுவற்றில் அடித்து கொன்றது. இதனையடுத்து மருத்துவகுழு கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. மேலும் சீரான நிலைக்கு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதற்கிடையில் வன உயிரன பாதுகாப்பு அலுவலர்கள் யானையை பார்வையிட்டனர். இதனையடுத்து யானை தெய்வானையை வன பகுதியில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) அதிகாலையில் திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வன உயிரின வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக நேற்று இரவுகோவிலுக்கு யானைகளை ஏற்றி செல்லக் கூடிய தனி சிறப்பு வாகனம் மற்றும் வன உயிரின அதிகாரிகள் வந்தனர். ஆகவே பாதுகாப்பாக உயிரின வன பகுதிக்கு தெய்வானை அனுப்பி வைக்கப்படுகிறது என்று கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.