திருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கம்: மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில் முன்பதிவு தொடக்கம்
மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதே போல் திருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் தொடங்கியது.
மதுரை,
மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதே போல் திருச்சி-நாகர்கோவில் ரெயிலும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களில் தொடங்கியது.
4 வழித்தடங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக எந்த பயணிகள் ரெயிலும் இயக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களுக்கு இடையே சரக்கு ரெயில் மட்டும் சென்று வந்தன. இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு சிறப்பு ரெயில்களை அறிவித்தது. அதில் நாடு முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு சென்றனர்.
இதற்கிடையில் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த ஊரை தவிர்த்து தமிழகத்தில் முக்கிய ஊர்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்து தொடங்க நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து ரெயில்வே வாரியத்திற்கு தென்னக ரெயில்வே கோரிக்கை விடுத்தது. அதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் 4 வழித்தடங்களில் மட்டும் ரெயில் போக்குவரத்து நாளை(திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.
மதுரையில் இருந்து....
அதன்படி மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு(வண்டி எண் 02636-வைகை எக்ஸ்பிரஸ்) சிறப்பு ரெயில் தினமும் காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்புகிறது. இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் வழியாக மதியம் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
அதேபோல விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதில் ஒரு இரண்டு அடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படும்.
திருச்சி-நாகர்கோவில்
அதேபோல் திருச்சி -நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில்(வண்டி எண்-02627) திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சென்றடையும்.
பின்னர் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் திருச்சிக்கு 10.15 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாத இருக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.
முன்பதிவு தொடக்கம்
இந்த ரெயில்களில் சமூக இடைவெளியுடன் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கப்படுகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுத்து மட்டுமே சிறப்பு ரெயில்களில் செல்ல முடியும். அதுவும் கவுண்ட்டர்களில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதையொட்டி ரெயிலுக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. அப்போது மதுரை ரெயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண் டர்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு பயணிகள் முன்பதிவு செய்ய வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்பதிவு செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
சிறப்பு ரெயில் செல்லும் ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு பதிவு செய்வதற்காக குறைந்த அளவு டிக்கெட் கவுண்ட்டர் தான் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை தற்போது ரத்து செய்ய இயலாது. இதற்கான வசதி பின்னர் ஏற்படுத்தப்பட இருக்கிறது. கொரோனா தொற்று இருப்பதால் பயணச்சீட்டுகளை முடிந்த அளவு இணையதளத்திலேயே பயணிகள் பதிவு செய்யுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.