சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து நாகர்கோவிலில் நாளை ஆர்ப்பாட்டம்

சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து நாகர்கோவிலில் நாளை தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.;

Update:2020-05-31 05:01 IST
நாகர்கோவில், 

சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து நாகர்கோவிலில் நாளை தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

7,500 மனுக்கள்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் இன்று வரை மக்கள் படக்கூடிய சிரமத்தை தெரிந்து, எங்கள் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கைக்கு தமிழக அரசாங்கம் செவிசாய்க்காத காரணத்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் பட்டினிச்சாவுக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இந்த திட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான கோரிக்கை மனுக்களை எங்களிடம் தந்து இருக்கிறார்கள். அதில், சில கோரிக்கைகளை அரசாங்கத்தால் தான் நிறைவேற்ற முடியும் என்ற நிலை இருப்பதால் அப்படிப்பட்ட 7,500 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளோம்.

கண்டனம்

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் கோட்டார் போலீஸ் நிலையம் முதல் கோட்டார் வரையிலான சாலையை விரிவுபடுத்தி இரு ஓரங்களிலும் நடைமேடைகள் அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்கு ஆகும் செலவை வியாபாரிகள் வழங்க வேண்டும் என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியே அந்த செலவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஆட்சேபனை இல்லை. தர முடியாதவர்களை வற்புறுத்துவதும், வழங்க முடியாத நிலையில் இருப்பவர்களின் பழங்கால கட்டிடங்களுக்கு கட்டிட பிளான் உள்ளிட்டவைகளைக் கேட்டு மிரட்டுவதும் சரியான அணுகு முறையல்ல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நாகர்கோவிலில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி 52 வார்டுகளிலும் 100 இடங்களில் கொரோனா விதிமுறைகள், சமூக விலகலை கடைபிடித்து ஒவ்வொரு இடத்திலும் 5 பேருக்கு மிகாமல் நாளை (திங்கட்கிழமை) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாகர்கோவில் நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அனைத்தையும் பள்ளி திறப்பதற்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின் போது மாநகர செயலாளர் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது, எம்.ஜே.ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்