குமரிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் அதிகாரிகள் ஆய்வு

குமரிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தியது. இதனை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2020-05-30 23:07 GMT
திருவட்டார், 

குமரிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் பயிர்களை சேதப்படுத்தியது. இதனை பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் அகோர பசி கொண்டதாகும். இது, விவசாய பயிர்களை தொடர்ச்சியாக நாசம் செய்யும் வல்லமை படைத்தவை. இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் வந்து பயிர்களை நாசப்படுத்தியதாக நேற்று வெளியான தகவல் விவசாயிகளை அச்சம் அடைய செய்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பயிர்கள் சேதம்

குமரி மாவட்டம் திருவட்டார் பூவன்காடு அருகே ஒருவரின் விவசாய நிலம் உள்ளது. இங்கு வாழை, ரப்பர் மரம், அன்னாசி போன்றவற்றில் உள்ள இலை, குருத்துகளை மென்று தின்றிருப்பது போன்று காணப்பட் டது. ஏதோ நோய் தாக்கி உள்ளதாக நினைத்த விவசாயி நேற்று தோட்டத்தில் சென்று பார்த்தார். அங்கு சேதங்கள் அதிகரித்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளிடம் நடந்தவற்றை கூறி உள்ளார்.

இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, வெட்டுக்கிளிகள் அங்கு படை எடுத்தது தெரிய வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் சில இடங்களை சேதப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது.

அதிகாரிகள் விளக்கம்

இதுபற்றி தகவல் அறிந்த மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருகுமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன், தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குனர் மனோ ரஞ்சிதம் உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து வந்து பயிர் சேதத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில், இது வட மாநிலங்களில் உள்ளது போன்ற பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. இதனால் யாரும் அச்சப்பட தேவை இல்லை. இது தோட்டங்களில் காணப்படும் சாதாரண வகை வெட்டுக்கிளி ஆகும். இந்த சீசன்களில் இடம் பெயர்ந்து வருவது வழக்கமானது தான். இதனை கட்டுப்படுத்த மாலத்தியான் என்ற கலப்பானை ஒரு லிட்டர் நீரில் இரண்டு எம்.எல். கலந்து தெளித்தால் போதும் என்றனர்.

கோரிக்கை

கொ ரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் காணப்படும் இந்த சூழலில், திருவட்டார் பகுதியில் உள்ள விளை பொருட்களில் வெட்டுக்கிளி புகுந்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வெட்டுக்கிளிகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்