புதுமடம் பகுதியில் ஆபத்தான மின் கம்பங்களை சீரமைக்க தீர்மானம்

புதுமடம் பகுதியில் சாயும் நிலையில் உள்ள ஆபத்தான மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மண்டபம் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2020-05-30 05:24 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் சாதாரண கூட்டம் உச்சிப்புளியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் நடராஜன், துணை தலைவர் பகவதிலட்சுமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செலவினங்கள் பட்டியலை யூனியன் உதவியாளர் சியாமளா வாசித்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களிடையே நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

மருதுபாண்டியன்:- மண்டபம் யூனியனில் கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கவுன்சிலர்களின் கோரிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் நிறைவேற்றித்தர வேண்டும். குறிப்பாக பட்டணம்காத்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகளவிலான பணிகளை உடனுக்குடன் செய்து தருவார் என நம்புகிறோம். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் நடராஜனுக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேச்சியம்மாள் ஜெயச்சந்திரன்:- வெள்ளரிஓடை முதல் நொச்சியூரணி வரை உள்ள தரவையில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகையால் இதை தடுக்கும் வகையில் தரவை பகுதியில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்க வேண்டும். தரவை முழுவதையும் சுற்றுலா தலமாக மேம்படுத்தி இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும்.

ஆபத்தான மின்கம்பம்

புதுமடம் அஜ்மல் சரிபு:- புதுமடம் பகுதியில் அதிகமான மின் கம்பங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக பள்ளிக்கூடம் அருகில் அமைந்துள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பாக பழுதடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் யூனியன் கூட்டத்தில் மின்வாரியத்தினர், விவசாய துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ள ஆணையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பட்டணம்காத்தான் முருகன்:- பட்டணம்காத்தான் பகுதியில் மின்சார பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆணையாளர், தலைவர்:- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மின்சாரம், குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். இனிவரும் காலங்களில் அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆறுமுகம், நித்யா, பாதம்பிரியாள், சபியாராணி, கண்ணன், காளசுவரி, சுகந்தி, முத்துச்செல்வம், மாரியம்மாள், தவுபீக் அலி, அலெக்ஸ், லட்சுமி, டிரோஸ், உஷா லட்சுமி, பேரின்பம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்