புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஜூன் 15-ந் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடிவு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

Update: 2020-05-30 05:21 GMT
கோட்டைப்பட்டினம், 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 24-ந் தேதி முதலே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தடை காலத்திற்கு முன்பே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படாததால் தடை காலத்தை குறைத்து, வருகிற 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மீன்களை வாங்க பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனத்தினர் வரமாட்டார்கள். மீன்களுக்கும் அவ்வளவாக விலை இருக்காது. இதனால் மீனவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். 

மேலும் இந்த தகவலை அரசு முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். ஏனென்றால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து வருகின்றனர். இதனை வேலை பார்த்து முடிக்க சுமார் 10 நாட்கள் தேவைப்படும். இதனால் மீனவர்கள் வருகிற 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு. இப்பகுதியில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் பெரும்பான்மையானவர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் அங்கிருந்து இங்கு வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியும். 

அதனால் ஜூன் 1-ந் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பில், மீனவர்களுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வழக்கம்போல் தடைக்காலம் முடிந்து வருகிற 15-ந் தேதியே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோம், என்றனர்.

மேலும் செய்திகள்