ஊரடங்கு எதிரொலி: செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தேய்ந்தது அரசிடம் நிவாரணம் எதிர்பார்ப்பு

ஊரடங்கால் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தேய்ந்து போய் உள்ளதால் அரசிடம் நிவாரணம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Update: 2020-05-30 02:41 GMT
திருச்சி, 

ஊரடங்கால் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தேய்ந்து போய் உள்ளதால் அரசிடம் நிவாரணம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு

பழைய காலங்களில் நம் முன்னோர் கால்களில் செருப்பு அணிந்திருப்பதை பார்த்திருக்க முடியாது. கால மாற்றத்திற்கேற்ப அனைவரும் கால்களில் செருப்புகள், ஷூக்கள் இல்லாமல் வெளியில் நடக்கவும், நடமாடவும் முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. செருப்புகளை தயாரிப்பதற்கு நவீன எந்திரங்கள் உள்ளிட்டவை வந்து விட்டாலும், கைகளால் தைத்து போடக்கூடிய செருப்புகளே அதிக காலத்திற்கு உழைக்கக்கூடியவை.

பழைய செருப்புகளையும், வார் அறுந்துபோன செருப்புகளையும் தைத்து கொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக தேய்ந்து போய் உள்ளது என்னவோ உண்மைதான். முழு ஊரடங்கு உள்ள காலத்தில் செருப்பு தைப்பதற்கு யாரும் வராததால் அவர்கள் வருவாய் இன்றி வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது ஓரளவு தளர்வு செய்யப்பட்டு விட்டதால் பிழைப்புக்கு ஏதோ கொஞ்சம் காசு கையில் கிடைக்கிறது என்ற ஆறுதலோடு உள்ளனர்.

நிவாரணம் எதிர்பார்ப்பு

இது தொடர்பாக திருச்சி டவுன்ஹால் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஸ்ரீதரன் கூறுகையில்,‘தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் தலைநகரங்கள், தாலுகாக்களில் பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் என மூலை முடுக்குகளில் எல்லாம் உட்கார்ந்து செருப்புகளை தைத்து கொடுக்கும் தொழிலை வெயில், மழை ஆனாலும் செய்து வருகிறோம். தமிழக அரசு ஊரடங்கு வேளையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நிவாரண உதவித்தொகை, காய்கறி நிவாரண தொகுப்புகள் வழங்கி வருகிறது. ஆனால், செருப்பு தைக்கும் தொழிலாளர்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. எனவே, அமைப்புசாரா வாரியத்தில் இணையாதவர்களையும் கணக்கில் கொண்டு செருப்பு தைக்கும் தொழிலாளர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

திருச்சி எடமலைப்பட்டியில் செருப்பு தைத்து கொண்டிருந்த தொழிலாளி மாரியப்பன் கூறுகையில், ‘முழுமையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட வேளையில் 2 வேளை உணவு பொட்டலங்களை தன்னார்வலர்கள் கொடுத்தனர். அது வயிறு நிரம்ப செய்தது. ஆனால், வருவாய் இல்லை. என் மனைவி வள்ளி வீட்டு வேலைகளுக்கு செல்வாள். கடந்த 2 மாதமாக கொரோனா பீதியால் வீட்டு வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டனர்.தற்போது என்னுடன் செருப்பு தைக்கும் வேலையை கவனிக்கிறாள். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது செருப்பு தைப்பதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.200 வருமானம் கிடைக்கிறது. ஆனால், அது குடும்பம் நடத்த போதாது. எனவே, அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்