நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்
நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை, கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்.;
நெல்லை,
நெல்லையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை, கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்.
நிவாரண பொருட்கள்
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று நெல்லை வந்தார். அவர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து. ஆனால் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்பு மூலம் எந்த பலனும் இல்லை. பாரதீய ஜனதா அரசின் தற்போதைய ஒரு வருட ஆட்சியில் காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமையை சட்ட திருத்த பதிவேடு உள்ளிட்டவைகளை செய்தது. இதுபோன்று ஊரடங்கை பயன்படுத்தி பல திட்டங்களை திணித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தவேண்டும். ஆனால் அதுபோன்று எதுவும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக முதல்-அமைச்சர் சொல்வது கட்டுக்கதையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, ரூபி மனோகரன், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி., பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்கினார்.
அம்பை- களக்காடு
அம்பை பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை சார்பில் ஏழைகளுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் தென்காசியில் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கும், களக்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் 200 பேருக்கும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக கடையநல்லூர் வந்த அவருக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் பழனி நாடார், ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.