நெல்லையில் கள்ளத்தொடர்பால் பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை போலீசில் கணவர் சரண்

நெல்லையில் கள்ளத்தொடர்பு காரணமாக பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2020-05-30 02:24 GMT
நெல்லை, 

நெல்லையில் கள்ளத்தொடர்பு காரணமாக பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

டீ மாஸ்டர்

நெல்லை வடக்கு புறவழிச்சாலையையொட்டி அமைந்துள்ள மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்தவர் பொன்இசக்கி (வயது 56). இவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (50). இவர் ஓட்டல் மற்றும் வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இவர்கள் முன்பு வண்ணார்பேட்டையில் குடியிருந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், முத்துலட்சுமிக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த பொன்இசக்கி, கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மனைவியை கண்டித்து உள்ளார்.

வெட்டிக்கொலை

இதை தவிர்க்கும் வகையில் பொன்இசக்கி குடும்பத்தினர் மணிமூர்த்தீசுவரத்துக்கு சென்று குடியேறினர். இந்த நிலையில் நேற்று காலை முத்துலட்சுமி அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பினார்.

அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்இசக்கி அரிவாளை எடுத்து மனைவி முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட பொன்இசக்கி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

போலீசில் சரண்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் மணிமூர்த்தீசுவரத்துக்கு விரைந்து சென்றனர். முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, பொன்இசக்கி தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கள்ளத்தொடர்பு காரணமாக பெண்ணை அவரது கணவரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்