தொட்டிலில் அனாதையாக விடப்பட்ட 4 மாத ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

தொட்டிலில் அனாதையாக விடப்பட்ட 4 மாத ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2020-05-30 01:27 GMT
கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் வெளியே வைக்கப்பட்டு இருந்த ஒரு தொட்டிலில் கடந்த 25-ந் தேதி இரவு 4 மாத ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. இந்த குழந்தையை யார் போட்டுச்சென்றார்கள் என்பது குறித்து தெரியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த காப்பக நிர்வாகிகள் தொட்டிலில் குழந்தை கிடப்பதை பார்த்ததும் அதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது குழந்தையின் எடை 4 கிலோ இருந்தது. தற்போது அந்த குழந்தை நன்கு உடல்நிலை தேறியது. மேலும் அந்த குழந்தையின் எடை 5.2 கிலோவாக அதிகரித்தது.

காப்பகத்தில் ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணி மேற்கொள்ளும் வகையில் அந்த குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஆண் குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அலுவலர்களிடம் கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ் வழங்கினார். காப்பக தொட்டிலில் இருந்து மீட்கப்பட்ட அந்த குழந்தையானது மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது இருப்பிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) பொன்முடிச்செல்வன், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மணிவண்ணன், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்