வெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி? எல்லைப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வெளியூரில் இருந்து வருபவர்கள் மாற்றுப்பாதை வழியாக குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி? என்பது குறித்து குமரி- நெல்லை எல்லைப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி,
வெளியூரில் இருந்து வருபவர்கள் மாற்றுப்பாதை வழியாக குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி? என்பது குறித்து குமரி- நெல்லை எல்லைப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குமரிக்கு வருகை அதிகரிப்பு
மும்பை, சென்னை உள்பட பெருநகரங்களில் கொரோனா வைரஸ் மிரட்டுகிறது. அதாவது, அங்கு கட்டுக்குள் அடங்காமல் ருத்ரதாண்டவமாடுவதால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அந்த நகரங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமானோர் தற்போது சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் மும்பை, சென்னையில் இருந்து தினமும் ஏராளமானோர் குமரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் வருபவர்களை காண முடிகிறது. அவ்வாறு வரும் நபர்கள், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு, பரிசோதனை முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
மாற்றுப்பாதை வழியாக...
பரிசோதனை முடிவில், தொற்று என தெரிய வந்தால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லை என தெரியவந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது தான் குமரி மாவட்டத்தில் தற்போது கடைபிடிக்கும் நடைமுறை. இந்த கெடுபிடிக்கு பயந்து வெளியூரில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் வரும் சிலர் மாற்றுப்பாதை வழியாக குமரிக்குள் நுழைந்து விடும் சம்பவம் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு வரும் நபர்களால் கொரோனா வைரஸ் ஊருக்குள் பரவி விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. காவல்கிணறில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போது ஆரல்வாய்மொழி வழியாக வரும் நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு முறைப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். காவல் கிணறில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஒரு சாலை செல்கிறது. அந்த வழியாக பல கிராமங்கள் உள்ளன. மேலும், சில இடங்களில் ஒற்றை பாதைகளும் உள்ளன.
அதிகாரிகள் ஆய்வு
இதில் பெரும்பாலான பாதைகளை அதிகாரிகளும், போலீசாரும் அடைத்து விட்டனர். எனினும், சிலர் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள் மூலமாக அந்த பாதையை கடந்து செல்வதாகவும் புகார்கள் வருகிறது.
இந்த நிலையில் குமரி- நெல்லை மாவட்ட எல்லையான கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதியில் கிராமங்களின் வழியாக செல்லும் மாற்றுப்பாதைகளை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் (பொறுப்பு), வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகீம், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
போலீசாரை நியமிக்க முடிவு
பின்னர் மாற்றுப்பாதை வழியாக யாரும் நுழைந்து விடாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகாமில் தனிமைப்படுத்தி, நேரடியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விடுவதால், கொரோனா வைரஸ் மேலும் பலருக்கு பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை மீறி வெளியூரில் இருந்து வரும் சிலர் மாற்றுப்பாதை வழியாக குமரிக்குள் நுழைந்தால் கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை தடுக்க மாற்றுப்பாதையில் போலீசாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.