குமரி கலெக்டருடன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் பெற்ற 7,500 மனுக்களை கொடுத்தனர்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது, மக்களிடம் பெற்ற மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.;
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது, மக்களிடம் பெற்ற மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ்ராஜன் தலைமையில், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகியோர் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவைச் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் 3 சட்டசபை தொகுதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மேலும் அந்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
7,500 மனுக்கள்
பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
‘ஒன்றிணைவோம் வா‘ திட்டத்தின்மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் அரசால் நிறைவேற்றப்படக்கூடிய 7,500 மனுக்களை கலெக்டரிடம் 3 எம்.எல்.ஏ.க்களும் இணைந்து வழங்கி உள்ளோம். அதில் பெரும்பாலான கோரிக்கைகள் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்க வேண்டும், உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன போன்றவை தான் அதிகமாக உள்ளன. இந்த கோரிக்கைகளை விரைவாக மக்களுக்கு நிறைவேற்றித்தர வேண்டும் என்று கலெக்டரை கேட்டுள்ளோம். அவரும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.