கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடரும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்
கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
குத்தாலம்,
கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம்
கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து புதிய மாவட்டத்திற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிய கலெக்டர் அலுவலகம்
இதனால் புதிய மாவட்டத்திற்கான அடிப்படை பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அருகே உள்ள முளப்பாக்கம் கிராமத்தில் தருமபுரம் ஆதினம் சார்பில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட 60 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால், அதற்கு முன்பாக குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க போர்க்கால அடிப்படையில் பணி நடந்து வருகிறது. கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.
மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள்
முதல் கட்டமாக தனி அலுவலர் நியமிக்கப்பட்டு மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். அதன் பிறகு மாவட்டத்திற்கு உரிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், பாரதி, உதவி கலெக்டர் மகாராணி, அ.தி.மு.க. நகர செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நற்குணம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.